என் பார்வையில் புத்தகம்-1:தண்ணீர் தேசம்

முதற்புத்தகப்பார்வைக்கு எனது தேர்வு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கவிதை வடிவில் ஓர் அற்புத அறிவியல் புதினம், தண்ணீர் தேசம். 

ஏனெனில், இந்த  புத்தகத்தை எண்ணற்ற முறை வாசித்தது மட்டுமல்லாது, தமிழ் புனைவுகளில் சற்று வித்தியாசமாக காதலையும் கடலையும் ஒரே சீராக கதைக்களமாக உட்படுத்தியதும்தான்.  

இந்த  அருமையான புத்தகம் குறித்து கூற வேண்டுமென்றால் 1996இல் இருந்து 2018 வரை இருபத்தைந்து பதிப்புகள், 24 உட்பகுதிகள் கொண்டது. அட்டைப்படம்  நீல திரைக்கடலை பிரதிபலிக்கிறது. 

அறிவியலும் அரசியலும் தமிழ்  இலக்கியத்திற்கு புதிதில்லை என்றாலும், நவீன தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு காதலையும், தமிழ்வழி அறிவியலையும் இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

பண்டைய தமிழ் இலக்கியத்தில் மறைபொருளாக அறிவியல் இருந்தபோதிலும் பெரும்பான்மையான நூல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழ் கவினர்களின்  நூல்களை மட்டுமல்லாது, வானசாஸ்திரம் மற்றும் கட்டடக்கலைகலாகட்டும்,  அவைவழி  நுணுக்கங்களையும் அவர்களின் நுண்ணறிவையும் எப்போதும் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது. அவ்வகை இலக்கியங்கள் மதாச்சார்ய முக்கியத்துவம்  பெற்றபோதிலும், அறிவியல் சுரங்கமாய்  இனம் காண கால தாமதம் என்றே கூறலாம்.  இன்றும், இளங்கலையில் நவீன தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பு கொண்ட தேர்வு  பாடப்பிரிவை   சொற்ப மாணவர்களே   தேர்ந்தெடுத்த அனுபவம்  என் ஞாபகத்தில் உள்ளது. 

வளர்ந்து  வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்குகொண்ட போதிலும் முதிர்ந்த தமிழ்வழி அறிவியல் நமக்கும் நம் எதிர்கால தலைமுறைக்கும்  அத்தியாவசியமானது என்பதை முன்னுரையில்  அழகு தமிழ் நடையில் ஆணித்தரமாக  முன்வைக்கிறார் நூலாசிரியர். 

கதைகளமானது,  ஒரு பத்திரிகையாளனின் (கலைவண்ணன்) பகுத்தறிவுடன் கூடிய  காதல், கதாநாயகியின் (தமிழ்ரோஜா) அப்பாவித்தனம், அவள் தந்தையின் அரசியல் பின்புலம், அதோடு  காதல் சந்திப்பு  கடலில்  ஓர் உயிர் போராட்டமாய் உருவெடுக்க  என பல்வேறு கோணங்களில் சுழல்கிறது.

முதலில்,  கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால்  கலைவண்ணன்- கதாநாயகன்; தமிழ்ரோஜா-கதாநாயகி; தமிழ் ரோஜாவின் தந்தை; இசக்கி,சலீம்,பரதன்,பாண்டி -மீனவ நண்பர்கள்; குறிப்பிட்டேயாக வேண்டிய முக்கிய சூழலியல்  கதாபாத்திரங்காக எலியும், ஆமைகளுடன் ஜனரஞ்சக மக்கள் கூட்டமும் எனலாம்.

கதை ஓட்டத்தை பார்க்கிலும், அதில் கூறியுள்ள விஞ்ஞானம் தாண்டிய மெய்ஞ்ஞானம் கருத்தை ஈர்க்கிறது. தண்ணீர் குறித்த அரசியல் எப்பொழுதும் சுவாரசியமானது. அதில் கடல், கடல்நீர் பற்றிய பேருண்மைகளை, மிக சுலபமாக உரைநடையில் அதுவும் காதலர் பேசுவதாய் காட்சிப்படுத்தியது சிறப்பு. 

கடல் பயம் கொண்ட தமிழ்ரோஜாவிடம் தைரியப்படுத்த கலைவண்ணன் சொல்லும் கருத்துக்கள், தன்னம்பிக்கை, தைரியம் கொள்வதே  மனித வாழ்க்கைப்பாடம்  என்றே  உணர்த்துகிறது. வறுமையின் பிடியில் பிறந்து, கஷ்டப்பட்டு சமூகத்தில் மேலே வந்த ஒருவன், தனக்கானவள் கடல் பயம் களைந்து பகுத்தறிவு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். 

அதற்கான பயிற்சி தமிழ் ரோஜாவின் மூர்ச்சையில் முடிகிறது.  அரசியல்வாதி தந்தையோ கலைவண்ணனை ஏய்க்க, தன் வாழ்க்கை தாக்கங்களையும், தாத்பரியங்களையும் பகிர்கிறான். வலிமையே வெல்லும் அறிவியல் கோட்பாடு காட்டில் மட்டுமல்ல நாட்டிலும் என்கிறான். இடைவெளி குறைக்க கடிதம் வழியில் தமிழ்ரோஜாவிடம் தன்னிலை விவரிக்கிறான். பின்னர், காதலர் கடற்கரையில் சந்திக்கிற வேளையில் கடலாட ஆசைப்பட்டு கப்பல் ஏறுகின்றனர். கலைவண்ணனின் மீனவ நண்பர்கள், ஜோடிகளை ஏற்றி கொண்டு மீன் பிடிக்க செல்கின்றனர். 

 குறிப்பாக, மீன்பிடி தொழிலின்  லாவகம், கடல் குறித்த அனுபவ அறிவு, ஆபத்து நிறைந்த நேரத்தில் அவர்களின் சமயோஜிதங்கள் ஆகியவற்றை ஆசிரியர் அருமையாக மேற்காட்டுகிறார். 

இவ்வாறாக கதை சீராக போய்க்கொண்டிருக்கையில், ஒரு உயிர் நெருக்கடி. வாழ்வதற்கு மட்டுமல்ல சாகும் நிலையிலும் வாழ ஆசைப்பட  தைரியம் வேண்டும். குறைந்து வரும் உணவு, தங்கம் போல சிறுக சிறுக  தண்ணீர், குன்றும் உடல்நிலை, உயிர் பயம், அவர்களுக்குளேயே  சில  உரசல்கள் என விறுவிறுப்பாக நகர்கிறது. ஒரு சாதாரண தீக்குச்சியின் முக்கியத்துவம், சாகும் நிலையில் உயிர் பிழைக்க போராடுகையில் தங்கத்தை காட்டிலும் விலைமதில்லாதது புரிகிறது.

ஆங்காங்கே பழகு,  பழக்கு அல்லது பலியாகு மற்றும்  கடின வாழ்க்கைக்கும்,  சொகுசு வாழ்க்கைக்கும் மனிதன் தன்னை தகவமைக்க வேண்டும் என்பது காவியத்தில்  ஒலிக்கிறது. இதற்கிடையில், சுற்றிலும் கடல் நீர் எனினும் குடிக்க நீர் இன்றி தவிப்பதும்,சைவ அசைவ கோட்பாடுகள் உயிர்த்தேவையின் முன் தவிடிபொடியாவதும், சில உணர்ச்சிப்பூர்வமான தனி மனித கோட்பாடுகளாய் உருவெடுப்பதும்  வாசகர்களாகிய நாம் எதிர்பாக்காதது.

முயற்சியை கைவிடாத கலைவண்ணன், விரக்தியின் உச்சியில் தமிழ்ரோஜா, பூசல்களுடன் மீனவ நண்பர்கள் எவ்வாறு போராடினார்கள்? அவர்கள்  மீண்டார்களா என்பதே கதையின் உச்சமாகும்.

ஒருவரியில் கூற வேண்டுமென்றால்  கடல் ஒரு அதிசயம் என்றும், கடல் ஒரு ஆபத்து என்கிற இரண்டு நேரெதிர்  மனநிலை கொண்ட இருவர் காதலித்தால் எவ்வாறு இருக்கும்? ஒருவர் மற்றவருக்காக மாற போகிறார்களா? இவர்களின்  கருத்து பரிமாற்றங்கள் நடைமுறை வாழ்வில் செயல்படுத்தப்படுமா? கடலில் உயிர்போராட்டத்தில் சிக்கினால் உயிர் பிழைப்பார்களா? பிழைத்தாலும் அவர்களின் காதல் உறவு பிழைக்குமா?  ஒரு மனிதன் சாவுக்கு பக்கத்தில் நிற்கும்போது கோட்பாடுகளின் நடுவுநிலை நிலைப்பாடென்ன?. இத்துணை கேள்விகளுக்கும்  காதல், நட்பு, பிள்ளைப் பாசத்திற்கு இடையில்  உயிர் பயம், குற்றவுணர்ச்சி, தன்னம்பிக்கை, வெறுப்பு, மனவுறுதி என்று பல  உணர்ச்சி கலவையாக பல சுவாரசியமான அறிவியல் தகவல்களுடன்  விடையளிக்கிறது  காதலும் கருத்தும்  நிறைந்த இக்காவியம்.

வாசித்து முடித்தவுடன், ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதமாக  அழுத்தத்தோடு மனதில் நிற்கிறது. குறை ஒரு  பாகத்துடன் முற்றுப்பெற்றது மட்டுமே.  எனக்கு சிறிது மனசோர்வு  ஏற்பட்டாலும் இந்த  புதினத்தை வாசித்தால்  அதன் வாழ்க்கைப்  பாட வரிகள் நம்பிக்கை கொடுக்கும். காதல் மற்றும் சில வேடிக்கை  கவிதை நடை புத்துணர்வு அளிக்கும். இது என் சொந்த அனுபவம். எனக்கு மிகவும் பிடித்த இந்த அற்புதமான புதினத்தை குறித்து இன்னும்  எழுதிக்கொண்டே போகலாம். எனினும், கடல் பெருநீரில் ஒரு துளியைப்போல் எனக்கு தெரிந்த வகையில்  பகிர்ந்துள்ளேன். தண்ணீர்த்தேசம் கண்டிப்பாக உங்கள் கருத்தையும் கவரும் என்று நம்புகிறேன்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.  எனது புத்தகப்பார்வை  முக(அக)வரிக்கு உற்சாகம் அளித்த  அனைவருக்கும் நன்றி!!!.  மீண்டும் ஒரு புது புத்தகப்பார்வையுடன் உங்களை சந்திக்கிறேன்.

                                                                    நன்றி!!!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பார்வையில் புத்தகம்-2: "சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம்"

சிரி சிரி மீம்ஸ்-3