என் பார்வையில் புத்தகம்-3: கல்வெட்டுகள்

பதினொன்று பதிப்புகளைக் கண்ட வைரமுத்து அவர்களின் இந்த நூல், 15 தலைப்புகள் கொண்ட கட்டுரைகளை உள்ளடக்கியது.தலைப்புகளை வாசித்தாலே முழுதும் வாசிக்கும் ஆசை பிறக்கிறது.

உங்கள் பார்வைக்காக தலைப்புகள்:

1.தமிழ் கூறு நல்லுலகு

2.எழுத்தும் எழுத்தாளரும்

3.புது கவிதையின் பாடுபொருள்

4.சந்திப்பும் சிந்திப்பும்

5.எனது பார்வையில் கண்ணதாசன், 

6.பட்டிக்காட்டு குயில்கள்

7.தாமத ஞானம்

8.தெலுங்கு பாரதி

9.அந்தி மந்தாரைகள்

10.ஓ மனிதனே!

11.இவர்களை பிறப்பேனா?

12.கவி வாசகம்

13.பாரதியின் பின்புலங்கள்

14.கண்ணீரை சிரிக்க விடுவோம்

15.மாறும் யுகங்கள் மாறுகின்றன 

உயரம் சென்ற மனிதர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் நினைவு கொண்டு பகிர்வது அரிது. அவ்வாறு கூற வேண்டுமென்றால்  சிலவற்றை பகிர்ந்து பலவற்றை மறைக்கும் நிலை வரும் என்பதால், பெரும்பாலானோர் அது குறித்து எழுத தயங்குவர்.இருப்பினும், இப்புத்தகம் ஆசிரியரின் வாழ்கை வரலாறு மட்டுமில்லாமல், சில சுவாரசிய சந்திப்புகளை, தான் கடந்து வந்த பாதைகளை, சந்தித்த மனிதர்களை, நேசித்த கருத்துக்களை, வியந்த சரித்திர  நாயகர்களை வெளிச்சத்தில் பகிரும் பெருமுயற்சி.

கட்டுரை வடிவின் முக்கிய அங்கமாய் மேற்கோள்கள் ஆங்காங்கே வியாபித்தாலும், ஆசிரியரின் இலக்கிய செறிவும், எதுகை மோனையும் ரசிக்க  வைக்கிறது. 

"இந்திய தேச வரைபடத்தில் இடம்பெறாத பாலைவனங்கள்" என்ற ஒரு வர்ணனையே வடுக்கப்பட்டி  பற்றி எடுத்துரைக்கிறது. 

அன்றைய காலகட்டத்தில், வடுக்கப்பட்டியின் எதிர்மாறான இயற்கைச் சூழலில் கிராம வாழ்வு எத்தகையது, எவ்வளவு கடுமையானது என்பது வாசிப்பவருக்கு நன்கு புரியும்.  கிராமம் என்றாலே பூஞ்சோலை என உருவகப்படுத்தும் மனதிற்கு, நெருஞ்சிமுள் காட்டை அறிமுகப்படுத்துகிறது.இந்த தடவை பதிவேற்றம் செய்ய சிறிது காலதாமதம், எனது சொந்த ஊர் பயணம். பசுமையான கிராமச்  சூழலில் எழுதுவது சுகம்தான். சிறு வயதில் ஓடி விளையாடிய  முற்றத்தையும், கிணற்றடியையும் பார்க்கும்போது வரும் சந்தோசம், வீட்டைச்  சுற்றி செம்மண் தரை, சிமெண்ட் தரையாகியுள்ளதை பார்த்ததும் வற்றிவிட்டது.ஆம்! இப்போது பாரம்பரியம் மிக்க கிராமங்கள்தான் நகரமயமாக்களில் முதலாவதாக மாற்றம் பெற்றுக்  கொண்டிருக்கிறது.

நகர்ப்புறங்கள் கிராமிய சமகால வீட்டு கட்டுமானம் செய்ய  முற்படும்போது இங்கே கிராமங்கள் டைல்சையும்,சிமெண்டையும்  பூசிக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும்போது ஒரு கதை  ஞாபகம் வருகிறது. அந்த கால  சித்தர் ஒருவர்  (பகுத்தறிவாதி என்பது பொருத்தும்) பின்னாளில் வரப்போகும் பஞ்சம் அறிந்து, ஊர் மக்களிடம் கூறினார். எவ்வளவு கூறியும் மக்கள் யாரும் கேட்கவில்லை.  

பின் தனக்கான வீட்டை செம்மண்ணும் சிறுதானியங்களையும்  கலந்து ஒரு குடிசை வீட்டை  கட்டினார். தான் வளர்த்த ஆடுகளுக்கு கள்ளிச்செடி உண்ணக் கொடுத்து  பழக்கினார்.வினோதமாக நடந்த இவரை மக்கள் பைத்தியம் என்றனர். பஞ்சமும் எதிர்பார்த்தபடி வந்தது. ஊரில் உள்ள ஆடுகள் தீவனம் இன்றி இறக்கையில் இவரது ஆடுகள் கள்ளிச்செடியை உண்டு உயிர்பிழைத்தன. ஆடுகளுக்கு, கள்ளிச்செடியை தின்றால் உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படும்.

அப்போது, அவர் கட்டிய குடிசை வீட்டில் அரிப்பு தீர உராயும். உராயும் போது, செம்மண்ணுடன் கலந்த தானியங்கள் கீழே விழும். அதனை எடுத்து கஞ்சி கலந்து பகுத்தறிவாதி பிழைத்துக் கொண்டாராம்.நேரம் கடந்து புரிந்து கொண்ட மக்களையும்  அவர் காப்பாற்றினார் என்றும் படித்தேன். 

இக்கதையில், கதை மையம் சித்தரோ அல்லது  பகுத்தறிவாதியோ, ஆனால்  என் பார்வையில் அந்த இயற்கையோடு இயைந்த கட்டுமானம் கண்ணில் படுகிறது. இதில் ஒன்று, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத கட்டுமான பணிகள். இன்னொன்று, தனிமனித உயிர் தேவைக்காக பிரத்யேகமாக சமயோசிதத்துடன்  கட்டப்பட்ட விதம். கிராமமோ நகரமோ, வசதி என்பதை விட அடிப்படை தேவையைப்  பூர்த்தி செய்வதையே வீடாக கொள்ள முடியும். இல்லையென்றால், இனி வரும் காலத்தில் மரங்கள் அழிக்கப்பட்டு திலகவதி அவர்கள் எழுதிய கல்மரம் (concrete houses) உருவாகும்.

அது மட்டுமல்லாது, புதிய மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கும் கிராமங்கள் நம் பிள்ளைகள் பார்க்கும்போது நகரையும் தாண்டிய நிலையில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருக்கும். தன்  நீண்ட கால பாரம்பரியமிக்க முகத்தில் கெமிக்கல் ஓப்பனையோடு இருக்கும். ஜனரஞ்சக கிராமியச்  சூழலை கடைசியாக பார்த்த தலைமுறை நாமாக இருப்போம் என்று தோன்றுகிறது. அவ்வாரென்றால், கிராம மக்கள் நவீனம் காணக்கூடாதா? 

நவீனங்கள் வாழ்வை வசதியாகும். ஆனால், பழங்கால வாழ்கை முறை மனதிற்கு நிம்மதியை தரும். புதுமையை வரவேற்ற நாம் பழமையை பரணில் ஏற்றிவிட வேண்டாம் என்பது என் கருத்து. ஒரு ஸ்விட்சில் மோட்டார் போட்டு தொழில்நுட்பம் பழகிய நமக்கு கிணற்றில்  நீர் இறைக்க தோன்றுமா?ஆயினும், நம்மால் இயன்றது, முடிந்தவரை நம் ஒவ்வொருவர் தாத்தா பாட்டி  வீட்டை மட்டுமல்ல அம்மியையும், ஆட்டுக்கல்லையும் விலை பேசாதிருப்போம். அவ்வப்போது, பிள்ளைகளுக்கு  நம் முந்தைய தலைமுறை பற்றியும், அவர்களின் அறிவியலும், பகுத்தறிவும் கலந்த வாழ்வு முறைகளைப்  பகிர்வோம்.

தீபாவளிக்கு  சொந்த ஊர்  சென்றிருக்கும் அனைவரும் இதை  நினைத்து பார்க்க வேண்டியது அத்தியாவசியமானது என்றே சிறப்பு புத்தக பார்வையில் இன்றைய கிராமிய நிலை குறித்து குறிப்பிடுகிறேன். தமிழ் சமூக தனிமனிதனின் அடையாளம் குறித்து மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நிதர்சனங்களை எழுதுவதை விட வேறு எதை குறித்து எழுதினாலும் சிறப்பு இருக்கும் என்றே தோன்றவில்லை.  

ஆசிரியர்  பற்பல கருத்துக்கள் கூறி இருந்தாலும், கிராமியம் குறித்த கருத்து  என்னை வெகுவாக பாதித்தது. அருவியோடும் எங்கள் கிராமத்தை பார்க்கும்போது, இன்றும், தண்ணீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்லும் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்று  கிராமத்தின் மறுக்க இயலா மறுபக்கத்தை நினைவூட்டியது. மேலும், இயற்கை தந்த கொடையை  பாதுகாத்து  அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய கடமையையும்  சொல்லாமல் சொல்லியது. இந்தக் கருத்தை தோற்றுவித்தது  நல்ல புத்தகமா  என்று நீங்கள் கேட்டால்  மறுப்பக்க நிதர்சனத்தை காண வைக்கும் பொறுப்புள்ள புத்தகம் என்று கூறுவேன்.

புத்தக வாசிப்பு  எண்ணங்களை மேம்படுத்தும் என்றால் மிகையாகாது. மேற்கூறியவை அனைத்தும் இந்தப்  புத்தகம்  வாசித்தப்பின் தோன்றியவை. புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துக்களை விட படித்து முடித்தபின் அவை யோசிக்க வைக்கும் கருத்துக்கள் பொக்கிஷமானவை. ஒருவேளை இந்த புத்தகம் இல்லாமல்  ஊருக்கு சென்றிருந்தால், தீபாவளி கொண்டாடியதோடு ரம்மியமான கிராமியம் என்று  எனது எண்ணவோட்டம்  நின்றிருக்கலாம். 

எதுவாகிலும் இந்த வார புத்தகமான கட்டுரை வடிவிலான கல்வெட்டுகள் யோசிக்க வைத்தது. ஆசிரியரின் அனுபவ பகிர்வு சிலாகிக்க வைத்தது. தூயத்தமிழ் விடுத்து தற்போதைய தமிழில் எழுதலாமே என்று வாசகர்கள் சிலபேர் என்னிடம் கேட்டார்கள். ஆசிரியர் பெயர் நினைவிலா இந்த  வரி "வாழ்வென்றால் முழுதானதொரு வாழ்வும், சாவென்றால் நித்திய மரணமும் வேண்டும்" தோன்றுகிறது.

 நடைமுறை வாழ்வில் உயர்வோ தாழ்வோ எதிலும் முழுமையே வேண்டுவதும், எதுவானாலும் முழுக்க முழுக்க என் முயற்சி மற்றும் பயிற்சியில் செய்ய   வேண்டும் என்பது என் எண்ணம். கேள்விக்கு விடையாக, பேசு தமிழைக் காட்டிலும்  செழுந்தமிழில் புத்தகப்பார்வை சிறுமுயற்சி  என் எண்ணங்கள் முழுவதையும் முழுமையாகவே என்னால் பகிர முடிகிறது. போன வார புத்தகப் பார்வையான கனவுகளின் விளக்கம் குறித்து வாசித்து பாராட்டிய வாசக நண்பர்களுக்கு நன்றி !! வாசிக்க விருப்பம் கொண்ட நண்பர்கள் இந்த இணைய முகவரியில் படிக்கலாம்.(https://puthagaparvai.blogspot.com/2020/11/2_7.html)

முக்கியமாக, பகிரும் புத்தகங்களை படிக்க விளைவதற்கு மிக்க நன்றி!! மீண்டும் புத்தகப் பார்வை இணைய வழி சந்திப்பு அடுத்த வாரமும்  தொடரட்டும்  என்று கூறி விடைபெறுகிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பார்வையில் புத்தகம்-1:தண்ணீர் தேசம்

என் பார்வையில் புத்தகம்-2: "சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம்"

சிரி சிரி மீம்ஸ்-3