என் பார்வையில் புத்தகம்-2: "சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம்"

 உலகை மாற்றிய 5 புத்தகங்களில் ஒன்றாகிய சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம் மொழிபெயர்ப்பை நான் படிக்க நேர்ந்தது. புத்தக கண்காட்சியில், கனவுகளின் விளக்கம் என்ற தலைப்பே என்னை  இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. அப்படி வாங்கும்போது சிக்மண்ட் அவர்கள் குறித்தோ அல்லது அவரின் கருத்தாக்கம் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. கனவு பற்றி அறிவியல் பூர்வமாக அறிய போகிறோம் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.

ஏனென்றால்,கனவுகள் அழகானவை. ஆழமானவை. சிலசமயம் நம்மை குதூகலப்படுத்தும். பலசமயம் நம்மை குழப்பும். நனவில் நடக்காத நிகழ்வுகள் கனவில் சர்வ சாதாரணமாய் நிகழும்.அதற்கு மாயாஜால உலகம் என்று கூறினால் பொருந்தும். இந்த நிலையில்லாத கனவுகள் காலையில் எழுந்ததும் மறைந்து விடும் அல்லது மறந்தும் விடும். 

என்னை பொறுத்தவரை கனவு நிஜங்களின்  நிழல். நனவு வாழ்க்கையின் எச்சம். கனவுகளுக்கு பொருள்  காண்பது ஜோதிடம் போலவே நம் அனைவர்க்கும் பழக்கப்பட்டது, வழி வழியாக பழக்கப்படுத்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக, உறங்கும்போது மூளையின் விழிப்பு நிலை காரணமாக கனவுகள் தோன்றுகின்றன  என்று நாம் அறிவோம். உளவியலில்  ஒருபடி மேலே போய் கனவு குறித்து முற்றிலுமாக விளக்க முயன்ற பல கோட்பாடுகளில் சிக்மண்ட் அவர்களின் கோட்பாடு குறிப்பிடத்தக்கது.

என் பார்வையில், உலகை மாற்றிய புத்தகம் என்பதை விட உலகை மிரள வைத்த புத்தகம் என்றே கூறலாம். மூலப்  புத்தகம் ஜெர்மனில்,1899 களில் வெளிவந்த இந்த  புத்தகத்தின்  600 காப்பிகள் சுமார் 8 ஆண்டுகள் விற்காமல் இருந்தலிலிருந்தே அதன் விமர்சனம் மற்றும் அது ஏற்படுத்திய சமூக மிரட்சியை காணலாம். பின்னர் கடும் விமர்சனத்திற்கு உள்ளான  இவரது கருத்துகள், பல ஆண்டுகள் கழித்து மக்களிடையே பிரபலமடைந்தது.

இதன் தமிழாக்கம் 2016இல் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்டது. மூலப்புத்தகத்தை அதன் கருத்து மாறாமல் மொழி பெயர்ப்பதென்பது  கடினம். அதிலும், மனோவியல் சார்ந்த புத்தகத்தை தமிழாக்கம் செய்வதும், முக்கிய கடவுச் சொற்களை மொழிப் பெயர்ப்பதும் மிகக் கடினம். ஆனாலும், அருமையாக ஆசிரியர் மொழிப் பெயர்த்துள்ளார்.

இப்புத்தகம் 10 உட்பகுதிகளாக  சிக்மண்ட் அவர்கள் குறித்தும், கனவுகளின் கடந்தகால ஆராய்ச்சிகள், அவற்றின் விளக்கம், விருப்ப நிறைவேற்றம் அதன் சிதைவுகள், கனவுகளின் மூலம்,  அதற்கு பின்னாலான உளவியல்  என விறுவிறுப்பாக உள்ளது.

மனோவியல் இருமுனை கத்தி என்றே கூற வேண்டும். ஆயினும், இந்த நூலில் சரளமாக ஆசிரியர்  கனவுகளுக்கான உதாரணங்களுடன் கருத்துக்களை விளக்குவது சிறப்பு.எனினும், சில இடங்களில், ஆழமாக வாசித்தால்  மட்டுமே கருத்துக்களின் தொடர்ச்சி அகப்படுகிறது.

ஆஸ்திரிய நரம்பியல் நிபுணரான சிக்மண்ட் ஃபிராய்ட் மனோப்பகுப்பாய்வு (psycho analysis) என்ற வார்த்தைக்கு முன்னோடி. பாரிஸில் சார்கோட் என்ற மருத்துவரின் ஹிப்னோடிசம்  மருத்துவ முறையை  காண சிக்மண்ட்க்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவே பின்னாளில், அவரின் மன அலசல் என்ற புதியமுறைக்கு  வித்திட்டது என்கிறார் ஆசிரியர்.

மன அலசல் என்பது நோயாளி படுத்துக் கொண்டு கண்களை மூடிய நிலையில்  பலவகை  மன  ஓட்டங்களை மருத்துவருடன் பகிர்வதாகும். அவ்வாறு செய்தல், நோய்க்கான மூல காரணத்தை வெளிப்படுத்தி, விரைவில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாகும். இந்த  சிகிச்சை வழி அனுபவத்தால் சிக்மண்ட் கனவுகளின் மூலமாக ஆழ்மனது,உள் மற்றும் வெளிமனம் என்று பகுக்கிறார். அவை கனவின் அம்சங்களை நிர்ணயிக்கும் காரணிகள் என்கிறார்.

கனவுகளின் பல்வேறு குணங்களைக் குறித்து எடுத்துக்காட்டோடு விளக்குகிறார். அடுத்து, கனவுகளை விளக்கும் முக்கிய பழைய  இரு முறைகள் பற்றியும் அதிலிருந்து சிக்மண்ட் அவர்களின் முறை எவ்வாறு மாறுபடுகிறது என்றும் எடுத்து காட்டுகிறார்.

சிக்மண்ட் அவர்கள், கனவை நோய்க்கான அறிகுறியாக பார்ப்பது வினோதமாக இருந்தது.நோய்நாடி நோய்முதல்நாடி என்ற குறளிற்கேற்ப  கனவைக் கொண்டு எவ்வாறு நோயை கண்டுபிடித்து குணப்படுத்தலாம் என்று இர்மா என்பவற்றின் கேஸ் ஸ்டடியை பகிர்கிறார். இதில், சிக்கல் என்னவென்றால், நோயாளி தனது கனவையும், தன் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி கூறவேண்டும். மேலும், குழந்தை பருவ கனவுகள் கூட வளர்ந்த பின் சிலருக்கு வரக்கூடும் என்றும், பெருன்பான்மை கனவுகள் மறந்தாலும், சில கனவுகள் ஆண்டுகள் தாண்டியும் நினைவில் நிற்கும் என்பதும் புது தகவல்.

கனவுகள் நமது ஆழ்மனதின் விருப்பங்களை ஈடேற்றும் விதமாக வருவதாய் தொடர்கிறார். அப்படியாக, நேர்மறை கனவுகள் வருவதைக்  கொண்டாலும், எதிர்மறை கனவுகளுக்கும் பயங்கர கனவுகளும் என்ன  காரணம் என்ற  கேள்வி எழுகிறது. அதற்கும் பதிலாக விருப்பங்களை மறைமுகமாக நிறைவேற்றும் கனவு சிதைவு குறித்து விளக்குகிறார்.

இதுவரை கூறிய அத்தனையுமே சுவாரசியமாகவும், ஒப்புக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. ஒரு கனவு அது குறிக்கும் வேறு ஒரு பிற்கால நிகழ்வை மாதிரி கனவுகள் என்றும்  அதன் சாராம்சம் என்றும் நகர்கிறது. கடைசியாக, மிகமுக்கிய சர்ச்சைக்குரிய ஈடிபஸ் கதை, அதன் கோட்பாடு குறித்துப்  படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த கோட்பாட்டின் விளக்கம், மேலும் கனவுகளுக்கும் குழந்தை பருவதிற்கும் மற்றும் அதனோடு  பாலுணர்வுக்கும்  சில முக்கிய மனோவியல் உணர்வுகளும்  தொடர்பிருப்பதாய் கனவு உதாரணங்களுடன்  சாடியது அதிர்ச்சியளித்தது. 

இத்தனை வருடங்கள் கழித்து படிக்கும்போதே அதிரவைக்கும் இந்த புத்தகம், 1900களில் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை மதம், சமூகம் சார்ந்த மக்களிடையே கொடுத்திருக்கும் என்பதை தெளிவாக உணரமுடிந்தது.

ரூமி அவர்கள் இவ்வாறான  சிக்மண்ட்  அவர்களின் சிந்தனையை ஏற்காவிடிலும் இந்த கோட்பாடுகள்  உருவாக  காரணங்கள் நோயுற்றவர்களை உதாரணமாக எடுத்ததால்  இருக்கலாம் என்கிறார். பிற்காலத்தில் சிக்மண்ட் ஃபிராய்ட் அவர்களையும் அவரது கருத்துக்களையும் ஏற்று கொண்டார்களா இல்லையா என்று விவரித்து  முற்றுப்புள்ளி வைக்கிறார் ரூமி அவர்கள்.

ஆசிரியர் கூறியதை போல, ஒருவேளை ஆரோக்கியமான மனித மனங்களை ஃபிராய்ட் ஆராய்ந்திருந்தால், மகத்தான பல உண்மைகளைக் கண்டுபிடித்திருப்பாரோ என்றே தோன்றுகிறது.ஒரு நூற்றாண்டின் பற்பல பிரபல மனோவியல் கருத்தியல்களை ஒரு புத்தகமாக பார்த்த திருப்தி மனதை நிறைக்கிறது. முழுவதுமாக கூறாவிடிலும், கனவு போலவே சிறுக கூறி அனைவரின் வாசிப்பும் பெருக வேண்டி விடைபெறுகிறேன். தீபாவளி வாழ்த்து முன்கூட்டியே கூறி, அடுத்த வாரம் சிறப்பு புது புத்தகப்பார்வையுடன் சந்திக்கிறேன்.நன்றி!!!!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பார்வையில் புத்தகம்-1:தண்ணீர் தேசம்

சிரி சிரி மீம்ஸ்-3